Wednesday, May 4, 2011

பாவேந்தர் கவிதை

வாளினை எடடா!

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

 
                    ***
தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?

செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

                                ***
நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தப் பெருங்கூட்டம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம்!

நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிடோம்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி
வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்!

நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள்
நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசரைவாய்
முந்துபல் பகைப்படை நம் படை முன்னிற்க
முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்!


நந்தமிழ்த் தாய்க்கெதிர் இந்திக்கும் ஆட்சியா!
நாம்! தமிழர் தமிழர் என்று முரசரைவாய்
வந்தவர் போயினார் செந்தமிழ்ச் செல்வமே
மணிமுடி புனைந்தனன் கொட்டடா முரசம்!

                     ***
தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்
தமிழ்நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?

தூங்கியதுண்டு தமிழர்கள் முன்பு - பகை
தூளாகும் அன்றோ எழுந்த பின்பு?
தீங்கு புரிகின்ற வடக்கரின் என்பு
சிதைந்திடச் செய்திடும் தமிழரின் வன்பு


அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க - மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!
துவளாத வாழ்க்கை உலகெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!


தமிழனுக் குலகம் நடுங்கியதுண்டு - அங்குத்
தன்னாட்சி நிறுவிட எண்ணியதுண்டோ?
தமதே என்று பிறர் பொருள் கொண்டு
தாம் வாழ எண்ணினோர் எங்குளார் பண்டு!

                                      ***
வீரத் தமிழன்

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!
                              ***
எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு! (இனிமைத்)

16 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தமிழ் உணர்ச்சி
    தமிழர் எழுச்சி

    ReplyDelete
  3. வாழ்க தமிழ்

    ReplyDelete
  4. நாம்! தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்
    குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
    கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம்!

    ReplyDelete
  5. எனது தமிழ் வாழ்க

    ReplyDelete
  6. நாம் தமிழர்

    ReplyDelete
  7. நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசரைவாய்!!

    ReplyDelete
  8. நாம் தமிழர்

    ReplyDelete
  9. தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
    தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
    தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
    செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

    ReplyDelete
  10. நாம் தமிழர் 💪🙏

    ReplyDelete
  11. நாம் தமிழர்❤️🔥

    ReplyDelete